சூரியனை மறைக்கும் மேக மூட்டத்துடன் ரம்யமான சூழல் நிலவியது. சாலையின் இரு புறங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான நிலப்பரப்பு. பொள்ளாச்சி வரை பயணம் செய்ததாகவே தெரியவில்லை அவர்களுக்கு.
பொள்ளாச்சியை அடைந்தவுடன் வாசு மட்டும் இறங்கி, அவன் காதலியை கூட்டிவரப் போக, அவர்களனைவரும் வண்டியிலேயே காத்திருக்க ஆரம்பித்தனர். அரைமணி நேரம் தவிப்பாய் கழிந்தது.
தூரத்தில் வாசு மட்டும் வந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பெட்டி இருந்தது. வண்டிக்கு வந்தபின் "வண்டிய எடுங்கடா! போகலாம், போற வழில அவ ஏறிப்பா" என்றான்.
அவன் சொன்னபடி வண்டி கிளம்பிய சிறிது நேரத்திலேயே வேகமாய் ஓடி வந்து அவன் காதலி ஏறிக் கொண்டாள்.
மீண்டும் கோவை நோக்கிப் பயணித்தார்கள்.
மருதமலையை அடைந்த பின் ஏற்கனவே சொல்லி வைத்தது போல எல்லாம் தயாராய் இருந்தது. வாசு தாலியை கட்ட, நண்பர்கள் முன்னிலையில் நல்லபடியாக அவர்கள் திருமணம் முடிந்தது.
வாசு இதற்காக வெகுநாள் திட்டமிட்டிருப்பான் போல.. பதிவாளர் அலுவலகத்திலும் எல்லாம் தயாராய் இருந்தது. கதிர்,ரத்னகுமார், விஸ்வா, கானா ஆகியோர் சாட்சி கையெழுத்திட, அங்கேயும் எல்லாம் நல்லபடியாக முடிந்தது
மேற்கொண்டு ஆக வேண்டிய அனைத்தையும் கவனித்துவிட்டு திரும்பிய போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டிருந்தது.
மறுநாள் வாசுவைத் தவிர எல்லோரும் கல்லூரிக்கு சென்றனர். வாசுவின் மனைவியின் தம்பி பாபு அன்று கல்லூரிக்கு வரவில்லை.
அன்று மாலை வாசுவின் மாமனார் மற்றும் சிலருடன் பேச்சு வார்த்தை நடந்தது. கடைசியில் சமாதானமாகி, வாசுவின் குடும்பத்துடன் அவனது மாமனார் குடும்பம் சுமுகமாகிப் போனது. அதன் அடையாளமாக அடுத்த நாள் பொள்ளாச்சியில் ரிசெப்ஷன் வைப்பதற்கான ஏற்பாடுகளை கவனித்தார் அவர்.
இத்தனை கலாட்டாவில் பாபுவை எங்குமே காணவில்லை.
இந்த வெற்றியை கொண்டாடவும் வாசுவின் தேனிலவுக்கு ஏற்பாடுகளை கவனிக்கவும் வீஸ்வா, ரத்னகுமார், கானா மற்றும் சிலருடன் ஊட்டிக்கு சென்றனர். சொந்த வேலையிருந்ததால் கதிர் மட்டும் விஸ்வாவின் அறையிலே தங்கினான்.
வேலையை முடித்துவிட்டு அறைக்கு திரும்பிய கதிர், சாப்பிட்டுவிட்டு புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். இரவு சுமார் ஒன்பது மணியிருக்கும், திடீரென்று அறைக்கதவை உடைத்துக்கொண்டு ஏழெட்டு பேர் கூச்சலிட்டபடி கதிர் மீது பாய்ந்தனர்.
இதைச் சற்றும் எதிர்பாராத கதிர் சுதாரித்துக் கொண்டு முடிந்தவரை போராடினான். இருட்டாயிருந்ததால் சரியாக உருவங்களை அடையாளம் தெரியவில்லை. "எங்கக்கா வாழ்க்கைய கெடுத்திட்டீங்களேடா" என்றபடி பாய்ந்த உருவத்தையும் குரலையும் அடையாளம் காண யோசித்த கதிரின் வயிற்றில் கூரிய கத்தியை இறக்கிவிட்டு ஓடினான் பாபு.
கதிருக்கு கண்களில் இருள் கவ்வியது. பக்கத்து வீட்டின் கதவு வரை தரையோடு தரையாக உடலை தேய்த்துக் கொண்டு வந்தவன் கதவை பலம் கொண்ட மட்டும் தட்டிவிட்டு சரிந்து விழுந்தான். கதவை திறந்த பக்கத்து வீட்டுக்காரர் அதிர்ந்துபோய் அவனை தூக்கிக் காரில் போட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
கண் விழித்துப் பார்த்தான் கதிர். கவலையோடு சுற்றியமர்ந்திருந்த விஸ்வாவும் ரத்னகுமாரும் சற்றே நிம்மதியுடன் புன்னகைத்தனர்.
"நீ இங்க வந்து ரெண்டு நாளாச்சிரா கதிர். எங்க பக்கத்து வீட்டுக்காரர் தான் உன்னை இங்க சேர்த்திருக்கார். இல்லன்னா இன்னேரம் உன்னை உயிரோடவே பாத்திருக்க முடியாது. நல்லவேளை இந்த ஆஸ்பிட்டல் டாக்டரை அவருக்கு தெரியும், அதனால விஷயம் போலீஸ் கேஸாகலை. யார் உன்னை கத்தியால குத்தினது தெரியுமா? வாசுவோட மச்சான் பாபுடா" - விஸ்வா
தெரியும் என்பது போலத் தலையசைத்தான் கதிர்.
"அவனுக்கு எங்க வீட்டை தெரியாதுடா. வாசுதான் ஓளறியிருக்கான். நம்ம எல்லாரையும் தீர்த்துகட்டிடலாம்னு ஆளுங்கள கூட்டி வந்திருக்கான் பாபு. நீ மட்டும் மாட்டிகிட்ட" - விஸ்வா
வேதனையாய் புன்னகைத்தான் கதிர். எழுந்து உட்கார முயன்றவனின் அடிவயிற்றில் தையல் வலித்தது.
"இந்த ரெண்டு நாள்ல விஷயம் ரொம்ப பெரிசாயிடுச்சி. நான் அடிக்கடி சொல்வேனே 'வேளச்சேரி விஜயன்' இவர்தான். இவரை வரச்சொல்லி அத்தனை பேரையும் சமாளிச்சோம்"
விஸ்வா காட்டிய இடத்தில் ஆறடி உயரத்தில் (மூன்றடி அகலத்தில்) தடித்த உருவத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
"பாபுவை கொல்லனும்டா விஸ்வா" மெதுவாய் பேசிய கதிரின் முகத்தில் கோபம் இருந்தது
"வேனாம் தம்பி, நான் சொல்லுறத கேளுங்க, இனிமே அவன் உங்க கிட்ட வாலாட்ட மாட்டான். நான் இங்க லோக்கல் ரவுடிங்க கிட்ட பேசிட்டேன். படிக்கிற காலத்துல இந்த மாறி ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிட்டீங்கன்னா அப்றம் வாழ்க்கை தடம் மாறிடும். நான் கூட படிச்சவன். கடைசி வருஷம் ஒரு சின்ன தகறாரில ஒருத்தன் கைய வெட்டிட்டேன். அப்ப ஆரம்பிச்சி இப்பவரைக்கும் நார்மல் வாழ்க்கைக்கு திரும்ப முடியல" என்றார் வேளச்சேரி விஜயன்
இரண்டு நாட்களுக்கு பின் சற்றே தேறிய கதிர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான்.
கத்தி குத்துபட்டு கதிர் மருத்துவமனையிலிருந்த போது அவனைப் பார்க்க சங்கீதா ஏன் வரவில்லை எனத் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் ரத்னகுமார்.
மணிக்கு Ranjan சொன்னது...
இந்த கதை என்க்கு தெரியவே தெரியாது. யாரும் சொல்லவே இல்ல.
கதை நல்ல போகுது..விறு விறுப்பா இருக்கு.
மணிக்கு கோபி சொன்னது...
அடுத்த பதிப்பிற்கு ஆகும் தாமதத்திற்கு மன்னிக்கவும். அலுவலக வேலைகள் ஆளைக் கொல்லுமளவு வளர்ந்து விட்டது. விரைவில் அடுத்த பகுதியை பதிக்கிறேன்
நீங்க சொல்லுங்க